கோயில் நுழைவும் தீண்டாமையும். குடி அரசு - தலையங்கம் - 08.05.1932 

Rate this item
(0 votes)

 

தீண்டாமை என்னும் வழக்கம் மனிதத் தன்மைக்கு விரோதமான தென்பதையும், அதுவே நமது நாட்டு மக்களைப் பல்வேறு பிரிவினராக்கி வைத்துக் கலகத் தன்மையை உண்டாக்கி வருகிறதென்பதையும், தீண்டாமை ஒழிவதன் மூலந்தான் நாட்டில் ஒற்றுமையும் சகோதரத்துவமும் நிலவமுடியு மென்பதையும் இப்பொழுது அனேகமாக எல்லாக் கட்சியினரும் ஒப்புக் கொண்டுவிட்டனர். தீண்டாமையை நாட்டை விட்டு அகற்றி, அதனால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்குச் சமூக சமத்துவமளிப்பதற்காகப் பல கட்சியினரும் பேச்சளவிலும் எழுத்தளவிலுமாவது முயற்சி செய்ய முன் வந்திருக்கின்றனர். 

தீண்டாமை ஒழிந்துவிட்டால் அதைப் போற்றுகின்ற வேத சாஸ்திரங்க ளுக்கும், வைதீக மதங்களுக்கும். அம்மதங்களைப் பின்பற்றுகின்ற கண்மூடி வைதீகர்களின் வயிற்றுப் பிழைப்புக்கும் ஆட்டமும் அபாயமும் உண்டாகி விடும் என்பதை அறிந்திருக்கின்ற திரு. எம். கே. ஆச்சாரியார் கூட்டத்தைச் சேர்ந்த முரட்டு வைதீகர்களையும் அவர்களுடைய சூழ்ச்சிகளில் அகப்பட்டு கிடக்கும் பொது ஜனங்களையும் தவிர வேறு யாரும் தீண்டாமைக்கு ஆதரவளிக்கவில்லையென்று துணிந்து கூறலாம். 

தீண்டாமையை ஒழித்து, அதனால் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்களை கை தூக்கி விட வேண்டியது ஒழுங்கும் நியாயமும் அவசியமும் ஆகும் என்ற உணர்ச்சி தற்போது நமது நாட்டு உயர்சாதி மக்கள் எனப்படு வோர்கள் சிலருடைய மனத்தில் பட்டிருப்பதற்குக் காரணம் தாழ்த்தப்பட்டச் சகோதரர்கள் செய்யும் கிளர்ச்சியும். சென்ற ஏழெட்டு ஆண்டுகளாக நமது இயக்கம் செய்துவரும் பிரசாரமுமே என்பதை யாரும் மறுக்க முடியாது. 

ஆனால் தீண்டாமையை எந்த வகையினால் ஒழிக்க முடியும் என்பதை ஆலோசிக்கும் போது, எல்லோரும் கீழ்க்கண்ட விஷயங்களைப் பற்றி எண்ணிப் பார்க்காமலிருக்க முடியாது. 

இந்து மதத்தைச் சாராதவர்களும், இந்து மதத்திற்கு எதிரானவர்களும் இந்துமதப் பற்றுடைய மக்களால், அந்நியர்கள்' 'மிலேச்சர்கள்' என்று இழித்துக் கூறக் கூடியவர்களுமாகிய வேற்று மதத்தினர்கள் உயர்சாதி இந்துக் களுடன் தீண்டாமையென்ற வேறுபாடின்றி நெருங்கிப் பழகிக் கொண்டி ருக்கின்றனர். 

ஆனால், நீண்டகாலமாக இந்துக்கள் என்றே மதிக்கப்பட்டு வருகின்ற தாழ்த்தப்பட்ட மக்களோ உயர்சாதி இந்துக்களுடன் நெருங்கிப் பழக முடியாத வர்களாகவும், அவர்கள் வசிக்கும் தெரு, குளம் கிணறு, பள்ளிக்கூடம். கோயில் முதலியவைகளைச் சமத்துவமாக அனுபவிக்க முடியாத வர்களாகவும் 'சண்டாளர்கள்' என்றும் 'பாபிகள்' என்றும் 'பஞ்சமர்கள்' என்றும், 'பாதகர்கள்' என்றும், 'புலையர்கள்' என்றும் பலவாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்டு வருகின்றனர். 

இந்தத் தகாத நடத்தைக்குக் காரணம் என்ன வென்பதைக் கொஞ்சம் பொறுமையோடு ஆலோசித்தால் விளங்காமற் போகாது. 

அந்நியராயிருந்தாலும் அவர்களிடம் மற்ற உயர்ந்த சாதி இந்துக் களைப்போல கல்வியும், செல்வமும், திறமையும், செல்வாக்கும், கட்டுப் பாடும், ஒற்றுமையும் அமைந்திருப்பதே அவர்கள் மற்ற உயர்ந்த சாதி இந்துக் களுடன் சமத்துவமாகப் பழகுவதற்குக் காரணமாகும். 

சகோதர இந்துக்கள் என்று சொல்லப்பட்டாலும் தாழ்த்தப் பட்டவர் களிடம், செல்வமும், கல்வியும், திறமையும், செல்வாக்கும், கட்டுப்பாடும், ஒற்றுமையும் இல்லாமையே இவர்கள் “உயர்சாதி” என்று சொல்லப்படுகின்ற இந்துக்களால் தீண்டப்படாதவர்களாகக் கொடுமை படுவதற்குக் காரண மாகும். 

ஆகையால் உண்மையில் தீண்டப்படாத சகோதரர்கள் சமூக சமத்து வம் பெற வேண்டுமானால் அவர்கள் கல்வியிலும், திறமையிலும், செல்வத் திலும், செல்வாக்கிலும், ஒற்றுமையிலும் மற்றவர்களைப் போல சமநிலையை அடையவேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இக் காரியத்தை இப்பொழுதோ அல்லது இன்றைக்கோ, அல்லது நாளைக்கோ, அல்லது மறுநாளோ, அல்லது ஒன்றிரண்டு மாதங்களிலோ அவசரப்பட்டுச் செய்து விட முடியாது. நாளடைவில்தான் இதைச் செய்யமுடியும். 

ஆனால் தற்போது, அவர்களுக்குச் சமத்துவமளிக்கச் செய்யப்படும் சாதகமான செயல்கள் கோயில் பிரவேசம், தெரு, குளம். கிணறு, பள்ளிக் கூடம் முதலியவைகளைத் தடையின்றி அனுபவிக்க இடமளிப்பது போன்ற காரியங்களாகும் என்பதும் உண்மையேயாகும். 

ஆகவே இவைகளில் தீண்டப்படாதவர்கள் சமத்துவ உரிமை பெறும் விஷயத்தில், அரசாங்கத்தாரும், சமூக - அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் ஆதரவாகவே இருக்கின்றார்கள் என்பதில் ஐயமில்லை. 

 

ஆனால் பொதுஜனங்களோ இன்னும் வைதீகர் வசப்பட்டவர்களாகவும் ஜாதி, மதம், தீண்டாமை முதலியவைகளில் கொண்டுள்ள நம்பிக்கை மாறாதவர் களாகவும் இருந்து வருவதினால், தீண்டப்படாத சகோதரர்கள் மேற்கூறியவை களில் சமத்துவம் பெறுவதற்குக் கஷ்டமாக இருந்து வருகிறது. 

இவற்றுள் மற்றவைகளைக் காட்டிலும் கோயில் பிரவேசம்' என்ற ஒரு விஷயமே இப்பொழுது மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. 

இந்தக் கோயில் பிரவேசத்தின் பொருட்டு குருவாயூர், நாசிக் முதலிய இடங்களில் சத்தியாக்கிரகங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இதற்குமுன் பல தடவைகளில் மதுரை, திருச்சிராப்பள்ளி, நாகர்கோவில், ஈரோடு முதலிய இடங்களில் கோயில் சத்தியாக்கிரகங்கள் ஆரம்பிக்கப்பட்டு அவை பய 

னின்றி கழிந்தன. 

ஆனால் அக்காலத்தில் கோயில் சத்தியாக்கிரகத்திற்கு இருந்த ஆதரவைக் காட்டிலும் இப்பொழுது கொஞ்சம் அதிக ஆதரவே இருந்து வருகிறது என்று கூறலாம். இந்த ஆதரவைக் கொண்டு விடாமுயற்சியுடன் கோயில் நுழைவுக்காகப் பாடுபட்டால் அவ்வுரிமை கிடைத்துவிடும் என்ப திலும் ஐயமில்லை என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால் இவ்வாறு தீண் டாத சகோதரர்கள் கோயில் நுழைவு உரிமை பெறுவதினால் அவர்களுக்குக் கிடைக்கும் பயன் என்ன என்பதைப் பற்றியே இப்பொழுது நாம் குறிப்பிட விரும்புகின்றோம். 

அவர்கள் மற்றவர்களுடன் சமத்துவமாகக் கோயில்களுக்குச் செல்லும் உரிமை பெறுவதன் மூலம் ஓரளவு தீண்டாமை ஒழிகின்றதென் பதையும், சமத்துவம் கிடைக்கின்ற தென்பதையும் நாம் ஒப்புக் கொள்ளு கிறோம். இதுவும் ரயில்வண்டிகளிலும் திருவிழாக் காலங்களிலும் கோயில் களின் தேர்களை இழுக்குங் காலங்களிலும் எந்த அளவில் தீண்டாமை ஒழிந்து சமத்துவம் ஏற்படுகிறதோ அந்த அளவில் தான் கோயில் நுழைவினா லும் தீண்டாமை ஒழிந்து சமத்துவம் ஏற்படும் என்பதே நமது கருத்தாகும். ஆகவே கோயில் நுழைவினால் நிரந்தரமாகத் தீண்டாமையொழிவோ, சமத்து வமோ ஏற்பட்டு விடமுடியாது என்பதைப் பற்றி யாரும் ஐயுற வேண்டிய தில்லை. 

ஆகையால் பொது இடத்திற்குப் போகக் கூடிய உரிமை தீண்டாதவர் களுக்கும் இருக்க வேண்டும் என்ற கருத்துடன் கோயில் பிரவேச முயற்சி நடைபெறுமானால் அதை நாம் மனப்பூர்வமாக ஆதரிக்கவே கடமைப் பட்டுள்ளோம் என்பதில் ஐயமில்லை. 

இவ்வாறில்லாமல் தீண்டாதவர்களும், கோயிலில் சென்று அங்கு இருப்பதாகச் சொல்லப்படும் 'கடவுள்' என்கின்ற குழவிக்கல்லுகளையும், பதுமைகளையும் தொழுவதற்கும், அவைகளின் பேரால் மற்ற மூட மக்களைப் போல் பணம் செலவு பண்ணுவதற்கும். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் பக்திமான்கள்' ஆவதற்கும் மோட்சம்' பெறுவதற்கும் கோயில் பிரவேசம் அவசியம் என்ற கருத்துடன் முயற்சி செய்யப்படுமானால் "இம்முயற்சி கண்டிப்பாகத் தீண்டாதவர்களுக்குக் கேடு சூழும் முயற்சியே” என்று தான் கூறுவோம். 

இப்பொழுது நமது நாட்டில் இருந்து வரும் எண்ணற்ற கோயில்கள் காரணமாகவும் அவைகளின் சார்பாக நடைபெற்றுவரும் 'திருவிழா'க்களின் காரணமாகவும் இவைகளின் மேல் பாமரமக்களுக்கு உள்ள நம்பிக்கை 'பக்தி' முதலியவைகளின் காரணமாகவுமே பொதுஜனங்களின் செல்வம் பாழாகின்ற தென்பதை யாரும் மறுக்க முடியாது. இதோடு மட்டுமல்லாமல் பொது ஜனங்கள் அறியாமை நிறைந்தவர்களாகவும் மூட நம்பிக்கை மிகுந்தவர் களாகவும் இருந்து வருகின்றதற்கும் கோயில்களே காரணமாகும். இந்த நிலையைக் கருதும் போது தீண்டப்படாத சகோதரர்களும் மூட நம்பிக்கை காரணமாகக் கோயில்நுழைவு உரிமை பெறுவார்களாயின் அவர்களும் தங்கள் பொருளைச் சிறிதும் பயனில்லாமற் பாழாக்கி என்றுமுள்ள வறுமை நிலையில் இருந்து வரவேண்டியதைத்தவிர வேறு வழியில்லை என்றே கூறுகின்றோம். 

ஆகையால் தீண்டப்படாத சகோதரர்களும், அவர்கள் சமூக சமத்து வத்தில் ஆவலுடைய மற்றவர்களும் 'பக்தி' என்ற மூடநம்பிக்கையைக் கொண்டு கோயில் நுழைவுக்குப் பாடுபடாமல் “பொது இடத்தில் எல்லா மக்களுக்கும் உரிமை வேண்டும்" என்ற உறுதியுடன் கோயில் நுழைவுக்கு முயற்சி செய்ய வேண்டுகின்றோம். இவ்வகையில் தீண்டப்படாத சகோதரர் களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிறோம். உண்மையில் தீண்டாமைக் கொடுமையொழிந்து மற்ற மக்களுடன் சமத்துவமாக வாழ்வதற்கு அடிப் படையான காரணங்களாக இருக்கும் செல்வம், கல்வி, திறமை, செல்வாக்கு. ஒற்றுமை முதலியவைகளைப் பெறுவதற்கு முயற்சி செய்யவேண்டுகிறோம். 

குடி அரசு - தலையங்கம் - 08.05.1932 

 

 
Read 52 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.